வைரஸ் திரிபு பற்றிய செய்திகளில் “திரிபு” என்று நிபுணர்கள் விளக்கம் வௌவால்களில் தோன்றுகின்ற கொரோனா வைரஸ் வகைகளில் புதிய ஒரு பிறழ்வைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சீனாவின் வுஹான் பல்கலைக்கழக மருத்துவ
ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவகை வௌவால் இனங்களில் இருந்து சில காலத்துக்கு முன்னர் கண்டு பிடித்த இந்த திரிபுக்கு “நியோ-கோவ்” (NeoCoV) என்று அவர்கள் பெயரிட்டிருக்கின்றனர். இன்னமும் பூரணமாக மதிப்பாய்வு செய்யப்படாத நிலையில் புதிய திரிபு பற்றிய தகவல் இந்த வாரம் சீன மருத்துவ ஆய்வு சஞ்சிகையாகிய biorxiv இல் கட்டுரை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.
உடனடியாகவே இத்தகவல் இணையத்தில் பரவியது. ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் ஒன்று தோன்றியுள்ளது என்றவாறு செய்திகள் பரவி மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தது. ஒமெக்ரோனுக்குப் பிந்திய அடுத்த திரிபு இது என்று திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் இந்தியாவில் பரவின.
சீன நிபுணர்கள் அறிவித்த “நியோ – கோவ்” என்ற இந்தத் திரிபு கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான்.ஆனால் தற்சமயம் உலகெங்கும் பரவும் தொற்று நோயாகிய ‘கோவிட் -19’ இன் ஒரு திரிபு அல்ல. அது இன்னமும் மனிதர்களில் தொற்றவில்லை. மரணங்களும் ஏற்படவில்லை – என்று நோயியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் படி அது 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உட்படசில நாடுகளில் பரவிய”மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி” (Middle East respiratory syndrome) என்னும் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய புதிய திரிபு ஆகும். “மேர்ஸ்” (MERS-CoV) என்று அழைக்கப்படும் தொற்று நோய்க் குடும்ப வைரஸின் அடுத்த பிறழ்வுகளில் ஒன்று தான் இந்த “நியோ-கோவ்” என்று விளக்கமளிக்கப்படுகிறது.
” நியோ கோவ் “குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் ருவீற்றர் பதிவுகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் மனித குலம் அடுத்து எதிர்கொள்ளக் கூடிய பெரும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்று
நோயாக இந்த”நியோ-கோவ்” மாறிவிடக் கூடும் என்ற எச்சரிக்கையையே சீன நிபுணர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
வௌவால்களில் காணப்படும் இக் கிருமி மேலும் பிறழ்வுகளை எடுத்தால் அதன் அடுத்த ஒரு திரிபு மனித உடல்அணுக்களில் நுழையும் வல்லமையைப் பெற்று விடும் என்று கூறப்படுகிறது.
“நியோரோமிசியா” (Neoromicia) என்ற வௌவால் இனங்களில் கண்டறியப்பட்ட வைரஸ் என்பதாலேயே அதற்கு நியோ-கோவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் – குமாரதாஸன். பாரிஸ்.