உலகம்

ரஷ்யாவுக்கு விளையாட்டு, சுவீடனுக்கு சீவன் போகுது !

கொட்லான்ட் தீவில் சுவீடிஷ் டாங்கிகள்

பால்டிக் கடலில் வெடிக்கக் கூடிய எந்தப் போரிலும் சுவீடனின் அமைவிடம் முக்கியத்துவம்மிக்கது. கடலின் நடுவே அமைந்திருக்கின்ற கொட்லான்ட் (Gotland) என்னும் சுவீடிஷ் தீவு பூகோள ரீதியில் பாதுகாப்புக் கேந்திரம் ஆகும்.பால்டிக் கடலின் ஆதிக்கத்தைக் கையில் வைத்திருக்க விரும்பும் சக்திகள்-அது ரஷ்யாவாக இருந்தாலும் சரி நேட்டோவாக இருப்பினும் சரி – முதலில் அந்தத் தீவைக் கைப்பற்றியாக வேண்டும்.
ரஷ்யாவின் கலினின்கிராட் கடற்படைத்தளத்துக்கு (Kaliningrad naval base) வடக்கே சுமார் முந்நூறு கிலோ மீற்றர்கள் தொலைவிலும் – ரஷ்யாவின் பரம எதிராளிகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமாகிய லித்துவேனியா ( Lithuania) லத்வியா(Latvia),எஸ்தோனியா(Estonia)ஆகிய மூன்று முக்கிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிர்த்திசையில் மேற்குப் பக்கத்திலும் – அமைந்திருப்பதால் கொட்லான்ட் தீவு குறித்து ரஷ்யா, சுவீடன் இருநாடுகளுக்குமே அச்சம் உள்ளது. எனினும் அமைதியை விரும்புகின்ற சுவீடனோ
கொட்லான்ட் தீவில் தனது படைபலத்தை நிறுவிப் பாதுகாப்பையும் அதன் கேந்திர முக்கியத்தையும் பேணும் விடயத்தில் அசிரத்தையாக இருந்து வருகிறது. ஆனால் கொட்லான்ட் தீவை “மூழ்கடிக்க முடியாத ஒரு விமானந்தாங்கிக் கப்பல் (“an unsinkable aircraft carrier) என்று வர்ணிக்கின்ற அமெரிக்கத் தளபதிகள் எப்போதும் அந்தத் தீவின் மீது தங்களது தீவிர கவனத்தைக் கொண்டுள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ரஷ்யா அதன் பாரிய கடற்படைக் கப்பல்கள் சிலவற்றை பால்டிக் கடலில் சுவீடனுக்கு நெருக்கமாக நகர்த்தியது. அதனால் அங்கு பதற்றம் உருவானது. அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு சுவீடன் உடனடியாகவே தனது அறுபதாயிரம் துருப்புக்களையும் போர் டாங்கிகளையும் கொட்லான்டில் தரையிறக்கித் தயார் நிலையில் வைத்தது. கடந்த பல பத்தாண்டுகளில் முதல் முறையாகத் துப்பாக்கியுடன் சீருடையினரையும் இராணுவ வாகனங்களையும் தெருக்களில் கண்ட தீவுவாசிகள் ஆச்சரியமடைந்தனர். “ரஷ்யர்கள் வருகிறார்கள்” என்ற பீதியும் வதந்திகளும் கிளம்பின. அதேசமயம், சுவிடனின் தலைநகரம் மற்றும் மூன்று அணு நிலையங்கள், விமான நிலையம், அரசகுடும்ப மாளிகை போன்ற பகுதிகளுக்கு மேல் ஆட்கள் இன்றிப் பறக்கும் பெரிய மர்ம ட்ரோன்கள் சில தென்பட்டன என்ற தகவல் நாடெங்கும் பரவியது. ட்ரோன்களின் பின்னணி என்ன என்பது தெரியவரவில்லை. எனினும் அது ரஷ்யாவின் வேலை என்று சிலர் நம்புகின்றனர். ரஷ்யா சுவீடனின் நிலைகளைத் தாக்குவதானால் அவற்றை நோட்டமிட்டு அறிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இது சும்மா சுவீடனைச் சீண்டும் நோக்கம் கொண்ட செயலாக இருக்கலாம் என நம்பும் சுவீடன் புலனாய்வுச் சேவையினர் உண்மையை அறிவதற்காக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

கொட்லான்ட் தீவின் அமைவிட
வரைபடம்)

நேட்டோ பாதுகாப்புக் கூட்டணியில் இணையாமல் தானும் தன்பாடுமாக இராணுவ “அணிசேராக்” கொள்கையுடன் தனித்து விலகி இருக்கின்ற அமைதியான நாடு சுவீடன். ஆயினும் வரலாற்று ரீதியாக அது ரஷ்யாவின் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வந்திருக்கிறது. தற்போது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் முஸ்தீபுகளில் இறங்கியிருப்பதால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நேச நாடுகளுக்கு சுவீடனின் தயவும் ஒத்துழைப்பும் மிகமிக அவசியமாகியுள்ளது. பால்டிக் கடலோர நேட்டோ நாடுகளான
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய மூன்றில் ஒன்றை ரஷ்யா தாக்குவதற்கு முயன்றால் நேட்டோ ஒப்பந்த விதிகளின் படி அமெரிக்கா அந்த நாடுகளுக்கு உதவ நேரிடும். அமெரிக்கப் போர் விமானங்கள் பால்டிக் கடல் மீது பறப்பதைத் தடுப்பதற்காக கொட்லான்ட் தீவை ரஷ்யா ஆக்கிரமித்து அங்கு அதன்
ஏவுகணைகளை நிறுத்த முயற்சிக்கலாம் எனவே அமெரிக்கா அந்தத் தீவில் தனது ஆதிக்கத்தை வைத்திருப்பதற்கே விரும்புகிறது. இந்தப் பின்னணியில் சுவீடன் நேட்டோவில் முழுமையாக இணைய வேண்டும் என்பதற்கான நகர்வுகள் மேலும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. கிழக்கில் இருந்து வருகின்ற அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்காக சுவீடனும் பின்லாந்தும் தாமதிக்காமல் மேற்கோடு (நேட்டோவில்) இணைந்திடவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன்.
பாரிஸ்.

Related posts

ஜாக் சிராக்கிற்குப் பின்னர் – – – – – இரண்டாவது முறையும் தெரிவாகும் பிரெஞ்சு அதிபராகிறார் மக்ரோன்?

namathufm

அந்தமானில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்!

namathufm

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்பு பட்டி கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment