ஏப்ரல் அதிபர் தேர்தலுக்கு முன்பாக ஒரு குட்டி வாக்களிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் பிராந்தியத்தில் நடைபெற்றிருக்கிறது. பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பொண்டி நகரசபைக்கு (Bondy- Seine-Saint-Deni) இந்த தேர்தல் இரண்டாம் முறையாக நடத்தப்பட்டது. நேற்றைய முதற் சுற்று வாக்களிப்பில் வலதுசாரி Les Républicains வேட்பாளர் ஸ்டீபன் ஹெர்வ் (Stephen Hervé) 49.89%வாக்குகள் பெற்று முதனிலையில் இருப்பதை முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் சோசலிஸக் கட்சியைச் சேர்ந்த (PS) முன்னாள் முதல்வர் சில்வின் தோமஸ்ஸான் (Sylvine Thomassin) 36.73%வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வாக்களிப்பின் இரண்டாவது இறுதிச் சுற்று எதிர் வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
பொண்டி நகர சபைக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் தேர்தல் நடை பெற்றிருந்தது. அச்சமயத்திலும் ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் ஸ்டீபன் ஹெர்வ் கூடுதல் வாக்குகளுடன் முதனிலைக்கு வந்திருந்தார். எனினும் வாக்களிப்பின் போது முறை கேடுகள் நடந்தன என்று கூறி முன்னாள் முதல்வர் சில்வின் தோமஸ்ஸான் செய்த முறைப்பாட்டை விசாரித்த நிர்வாக நீதிமன்றம் தேர்தலை ரத்துச் செய்ததுடன் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட்டிருந்தது. தேர்தலுக்கு முன்னர் பதவியில் இருந்த முதல்வர் சில்வின் தோமஸ்ஸான் தொடர்பாகப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் வாக்களிப்புத் தினத்தன்று வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்றுஅவர் முறைப்பாடு செய்திருந்தார்.
வேட்பாளரின் கார் எரிப்பு நேற்றைய மறுவாக்குப் பதிவுக்கான பிரசாரங்களும் அங்கு பெரும் பதற்றத்துக்கு மத்தியிலேயே இடம் பெற்றிருந்தன. சோசலிஸக் கட்சியின் வேட்பாளர் சில்வின் தோமஸ்ஸானின் கார் கடந்த வெள்ளியன்று இரவு எரியூட்டப்பட்டிருந்தது. இச் சம்பவத்துக்கு அவர் தனதுருவிட்டர் பதிவில் கண்டனம் வெளியிட்டிருந்தார். ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் ஸ்டீபன் ஹெர்வ்வும் இதனைக் கண்டித்துள்ளார். தேர்தல் முறைகேடுகளிலும் வன்முறைச் சம்பவங்களிலும் தமது ஆதரவாளர்கள் எவருமே சம்பந்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் – பாரிஸிலிருந்து குமாரதாஸன்.