நோய்த்தொற்றை எதிர்க்க அடிக்கடி Booster தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதற்குப் பதிலாக COVID-19 தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளலாம் என Pfizer நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மற்ற நடவடிக்கைகளைப் போலவே COVID-19 தடுப்பு மருந்தையும் பெற்றுக் கொள்ளலாம் என Pfizer நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா (Albert Bourla) யோசனை கூறியுள்ளார். சில மாதங்களுக்கு ஒரு முறை என அடிக்கடி Booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் நடைமுறை அவ்வளவு சிறப்பானதாகத் தெரியவில்லை என்றார் அவர். ஆண்டுக்கு ஒருமுறை COVID-19 தடுப்பூசி போடும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாக நிறுவனம் சொன்னது. அதன் மூலம் மக்கள் அதனை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்று அது குறிப்பிட்டது. அதோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடுதலானோரை ஊக்குவிக்கும் நடை முறையும் எளிதாகலாம் என நிறுவனம் தெரிவித்தது. ஓமக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகையான கிருமிகளைக் கருத்தில் கொண்டு COVID-19 தடுப்பு மருந்தை உருவாக்கும் வழிகளை ஆராய்வதாகவும் Pfizer நிறுவனம் குறிப்பிட்டது. உலக அளவில் நோய் வேகமாய்ப் பரவுகிறது. சில நாடுகள் நான்காம் முறையாகத் தடுப்பு மருந்தை வழங்கி வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான இடை வெளி குறைக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் Pfizer நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வந்துள்ளது