உலகம்

ஒமெக்ரோனின் “சகோதர வைரஸ்” உலகம் விழிப்புடன் அவதானிப்பு!

ஆய்வக சோதனையில் பிடிபடாத”கள்ளத்தனமான திரிபு”என ஐயம் கடந்த இரு தினங்களாக ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் இத்தகவல் வெளியாகி வருகிறது.”பதற்றப்பட ஒன்றும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்கின்றனர் நிபுணர்கள்.விவரம் இது தான். ஒமெக்ரோனில் இருந்து சிறிது மாறுபட்ட அதன் “சகோதர வைரஸ் திரிபு “(“little brother variant of Omicron”) ஒன்றை உலக அறிவியலாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. தென் ஆபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட திரிபுக்கு ஒமெக்ரோன் என்று பெயரிடப்பட்டது. அதன் மூலக்கூறுகள் BA1 என்ற அறிவியல் குறியீட்டில் அழைக்கப்பட்டது. இது வரை உலகெங்கும் பரவிய ஒமெக்ரோன் திரிபு அதுவே ஆகும். இப்போது அதிலிருந்து தோன்றிய பிறழ்வு ஒன்று (sub-variant) டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. முந்தியதைப் போன்றே இதுவும் தொற்றாளர்களில் “மிக லேசான” பாதிப்புகளையே உண்டாக்குவது தெரியவந்துள்ளது. எனினும் “ஸ்பைக் புரதம்” என்கின்ற அதன் புரத மரபு மூலக் கூற்று வடிவம்(Spike glycoprotein) தங்களுக்குக் “குழப்பங்களை” ஏற்படுத்தியிருப்பதாகச் சில நாடுகளின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BA.2 எனப்படுகின்ற அந்த இரண்டாவது திரிபை சில அறிவியலாளர்கள் “கள்ளத்தனமானது” (stealth Omicron) என்று அழைக்கின்றனர் அதற்குக் காரணம் என்ன? உலகெங்கும் வைரஸ் தொற்றுக்களை உறுதி செய்யவும் தொற்றாளர் எண்ணிக்கையைக் கணக்கிடவும் பிசிஆர் (PCR) என்ற பரிசோதனை முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஒமெக்ரோனின்இந்த இரண்டாவது வகைத் திரிபை பிசிஆர் பரிசோதனையில் கண்டறிய முடியாதிருக்கும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர். பொதுவாக கொரோனோ வைரஸ் வகைகளின் அடிப்படைப் புரதக் கட்டமைப்புகளே அவை மனித உடலில் தொற்றுவதற்கும் தடுப்பூசி மூலம் அதனை எதிர்ப்பதற்கும் பிசிஆர் போன்ற பரிசோதனைகளில் அதனைக் கண்டறிவதற்கும் உதவுகின்றன. “ஸ்பைக் புரதம்” (Spike glycoprotein) என்கின்ற மரபுக் கட்டமைப்புகளை ஒமெக்ரோனின் புதிய திரிபில் கண்டறிய முடியாதிருப்பதாகக் (S-gene dropout) கூறப்படுகிறது. இவ்வாறான அதன் “கள்ளத்தனம்” பரிசோதனைகளையும் தடுப்புமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மிகத் தீவிர பரவல் தன்மை அவதானிக்கப்பட்டிருப்பினும் இந்தப் புதிய பிறழ்வுதொற்று நோயின் போக்கில் பெரிய மாற்றத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தும் என்பதை உடனடியாகச் சொல்லி விட முடியாது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் டென்மார்க்கிலேயே இந்தத் திரிபுத் தொற்று அதிக எண்ணிக்கையில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த நாட்டிடம் உள்ள வைரஸ் மரபு வடிவங்களைப் பரிசோதித்துக் கண்டறிகின்ற போதிய வசதிகளும் ஒரு காரணமாகும்.பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ கடந்த வியாழனன்று கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில் ஒமெக்ரோனின் புதிய”சகோரத் திரிபு” பரவுவது பற்றிய தகவலையும் சாடமாடையாகக் கோடிகாட்டியிருந்தார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் – பாரிஸிலிருந்து குமாரதாஸன். 

Related posts

யுக்ரேன் கொலைகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய 1600 பிரித்தானிய வீரர்கள்

Thanksha Kunarasa

ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் நிறுத்தம்.

Thanksha Kunarasa

Leave a Comment